அக்காரவடிசல் (சர்க்கரை பொங்கல் )
திருப்பாவை
கூடாரை வேல்லுஞ் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனையப் பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பால்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
கூடார வல்லி , மார்கழி 27 ம் நாள் கொண்டாடப்படுகிறது. கூடாரை (எதிரிகள், கொடியவர்கள்) சக்தியாலே வெல்லும் பெருமான் தன்னுடைய அழகால் கூடும் அன்பர்களை வெல்லுகிறான் இருப்பினும் , அம்புக்குத் தோற்காத பெருமாள் அன்பிற்குத் தோற்கிறானாம், எம்பெருமானிடம் சம்மானம் கேட்கிறார்கள். 'யாம் பெறு சம்மானம்' என்று கேட்கிறார்கள் .'நாடு புகழும்படி நாங்கள் சம்மானம் பெறவேண்டும்' என்கிறார்கள். அழகிய ஆடை அணிகலன்களை துறந்து, கண்ண்ணுக்கு மை துறந்து, கூந்தலில் பூசூடாமல் , நோன்பு இருந்தார்கள் அல்லவா? 'நோன்பு முடிந்தபின் அணிமணிகளை யெல்லாம் நாங்கள் பெற்றுக் கொள்வோம்' என்கிறார்கள். 'அனைவரும் கொண்டாடும்படி நீ எங்களுக்கு அவற்றையெல்லாம் சம்மானிக்க வேணும்' என்கிறார்கள். சம்மானங்களில் எல்லாவற்றுக்கும் மேலாகச் சர்க்கரைப் பொங்கலை குறிப்பிடுகிறார்கள் ! 'அதன் பின்னே பால் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார' வழங்கவேணும் என்கிறார்கள். 'நெய்யுண்ணோம், பாலுண்ணோம்' என்று விரதம் கிடந்தவர்கள் இப்போது ஆசை தீரச் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வேணும் என்கிறார்கள். எப்படி என்றல், கையில் சர்க்கரை பொங்கலை எடுத்தால் அதிலிருந்து வழியும் நெய், முழங்கை வழிந்தோடுகிறதாம், அதை கொண்டாடவே அன்று சர்க்கரை பொங்கல் செய்து (நிறைய நெய் விட்டு ) பெருமாளுக்கு படைத்தது அனைவருக்கும் கொடுத்து பின் நாமும் உண்ண வேண்டும்.
அக்காரவடிசல் (சர்க்கரை பொங்கல் )
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 1கப்
- பாசிபருப்பு - 1/4 கப்
- பாகு வெல்லம் - 1 1/2கப்
- பால் - 1/2 லிட்டர் (காய்ச்சிய பால் )
- சர்க்கரை - 3 ஸ்பூன்
- குங்குமபூ - 1 பிஞ்ச்
- முந்திரி - 10
- திராட்சை - 5
- நெய் - 1/2 கப்
- ஏலக்காய் பொடி -1/4 ஸ்பூன்
- பச்சை கற்பூரம் - 1 பிஞ்ச்
செய்முறை
அரிசி , பருப்பு இவை இரண்டையும் குக்கரில் 5 டம்ளர் தண்ணிர் விட்டு 5-7 விசில் வரும் வரை வைத்து இறக்கவும். ஒரு கடாயில், நன்றாக வெந்த அரிசி ,பருப்பை போட்டு பாலை விட்டு நன்றாக கிளற வேண்டும் சுமார் 10 நிமிடங்கள் கை விடாமல் கிளறிய பிறகு வெல்லத்தை போட்டு,அதில் நெய்யை விட்டு 15 நிமிடங்கள் ஆன பிறகு சர்க்கையை குங்குமபூ, பச்சை கற்பூரம் ,ஏலக்காய் பொடி போட்டு இறக்கி வைத்து நெய்யில் முந்திரி ,திராட்சை தாளித்து கொட்டவும்
.
பின் குறிப்பு
பாகு வெல்லத்தை நன்றாக பொடித்து சேர்க்கவும் .
No comments:
Post a Comment